இந்திய கடற்படையினால் இலங்கை மீனவர்கள் கைது
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான வஜ்ரா ரோந்து கப்பல் சா்வதேச கடல் பகுதியில் 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கையைச் சோ்ந்த ஒரு விசைப்படகில் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் 6 பேரையும், அவா்களது படகையும் கடலோர காவல் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மீனவா்கள் 6 பேரும் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் இந்திய கடலோர காவல் படையினா் இன்று மாலை தூத்துக்குடி தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்களிடம், மத்திய, மாநில உளவுத்துறை, சுங்கத் துறையினர், மீன்வளத் துறையினர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு 6 பேரையும் நாளை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என மெரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்
No comments: