ரம்புக்கனையில் போராட்டம்
ரம்புக்கனை பகுதியில் ரயில் பாதையை மறித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ரம்புக்கனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மலையகத்துக்கான இரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 15 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பவுசர் ஒன்றுக்கு தீ வைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி எடுத்திருந்ததுடன், முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டமையின் காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தின் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்ட தக்ககது
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக குறித்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: